facebook-round

img

கோரிக்கை வைக்காமல்  கொடுப்பது உன் கோடிக் கை...-ஆர்.பாலகிருஷ்ணன்

தாய் மொழி
------------------------

ஒவ்வொருவன்
தாய் மொழியும்
உயர்வானதே..
அவனவன் தாய் போலவே..

உலகில் எந்தத் தாய்
உயர்வு?
எந்தத் தாய் தாழ்வு?

எஸ்கிமோவின்
தாய்மொழிக்கு 
தெரியாத 
பனியின் நிறம், இதம், குணம், மணம்
வேறெந்த மொழிக்குத் தெரியும்.

என் 
தமிழ்த்தாய்!
செம்மொழி என்பது 
அவளது
சிறப்பு மகுடம்..

இதோ நான்
உலகில் விழுந்து
உள்ளிழுத்த முதல் காற்றில்.
உறிஞ்சிக் குடித்த
முதற் சொட்டுப்
பாலில்...
கண் விழித்துப்
பார்த்த காட்சியில்...
காதில் விழுந்த 
முதற் சொல்லில்...
நடந்த மண்ணின்
நறுமணத்தில்...
குளித்த முதல் மழையில்..
பற்றித்தின்ற முதல் பருக்கையில்
பருகிய நீரில்
வாசித்த எழுத்தில்
யோசித்த கருத்தில்
வடித்த கவிதையில்
தமிழ்.

தமிழ்
எவ்வளவு 
அன்பானவள்.

அவள்.

நின்ற இடத்தில் 
அழகு நிற்கிறது.
அவள் 
சென்றதும்
அது
அவளோடு
செல்கிறது.

தமிழின் 
மகனாய் இருப்பது
எத்தனை பெரிய
பெருமிதமாய் இருக்கிறது.

இதோ ..
நினைத்ததை பேசுகிறேன்
நேசமுடன்...

தாயே தமிழே...
நீ கோயில்.
நான் செருப்பு.

தெருமுனைக்கு அப்பால் ஓர்
திசையறியாச் சிறுவனை நீ
இருதுருவம் பார்த்து வர 
ஏன் பணித்தாய்?

தூரத்தில் சென்றால்
தொலைந்து விடுவேனென்று
ஓரத்தில் நின்று
உரக்க முறையிட்டேன்.

நீ கொடுத்த மேடை 
நீ போட்ட பூமாலை
நீ கொடுத்த தமிழ்நாக்கு
வேறெங்கு எனக்கிருப்பு..?

அழுது புரண்டாலும் 
ஆர்ப்பாட்டம் செய்தாலும்
அழகே... தமிழ் உந்தன்
ஆணை மாறவில்லை.

சென்றஇடம் பலநூறு
திசையெல்லாம் உன்பாதை...
பார்த்து வரத்தானா
பணித்து விட்டாய் என்னை?

சிந்துவெளி மண்ணுக்குள்
முணுமுணுத்த தமிழோசை
முந்தியெந்தன் காதுகளை 
முட்டியதேன் தாயே...?

வள்ளுவனின் குறள்பேச
வடிவமைத்த மேடையிலே
உள்ளிருந்து எனக்குள்ளே
ஊற்றெடுத்தாய் நீயே..!

கோரிக்கை வைக்காமல் 
கொடுப்பது உன் கோடிக் கை...
ஏன் என்று தெரியாமல்
நடப்பது என் வாடிக்கை...

-Balakrishnan R